Tuesday, December 21, 2010

ஈரோட்டுக்கு வாங்க...இளைப்பாறி போங்க..



வாசித்து நேசித்த இதயங்களையும் நேசித்து வாசித்த கரங்களையும் வருக...வருக என வரவேற்க்கிறோம்...







நிகழ்ச்சி நிரல்
காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ் வணக்கம்
*வரவேற்புரை
*பதிவர்கள் அறிமுகம்
*கூட்ட துவக்க உரை
முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)
சிறுகதைகளை உருவாக்குவோம்
எழுத்தாளர். பெருமாள் முருகன்
உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள்
எழுத்தாளர். பாமரன்
குறும்படம் எடுக்கலாம் வாங்க
அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
நிழற்படங்களில் நேர்த்தி
’கருவாயன்’ - சுரேஷ்பாபு
உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை
சிதம்பரன்.கி

மதியம் 01-30 – 02.30 மதிய உணவு

இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)
இன்றைய இணையமும் வலைப்பூக்களும்
ஓசை செல்லா
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல்
லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)

மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)
பதிவர்கள் கலந்துரையாடல்
ஒருங்கிணைப்பு “சேர்தளம்”

நன்றியுரை
மாலை 05.00 மணி நிகழ்ச்சி நிறைவு

Thursday, August 19, 2010

நம்மால் முடியுமென்று உன்னை நம்பு

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது.
அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த
நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால்,
அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே!
ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை
ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில்
விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது.
வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன்
காட்டிற்குள் நுழைந்தால் போதும்;
வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்.
இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது.
இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன்
மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின்
தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின்
கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே
யாரும் அந்தப் பதவிக்கு
ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை
பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
இருப்பினும் ஒரு சிலர்
'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்;
மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி
ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள்
இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு
ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின்
கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல
வேண்டும். அவனை வழியனுப்ப நாடே
திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான
ஆடைகளையும் நகைகளையும் அணிந்து,
முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன
மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப்
பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில்
சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு
அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப்
பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான்,
''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக்
கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா
செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு
வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன!
சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான
படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு
மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க
பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே!
காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு
அழைத்துச் சென்ற எந்த மன்னனும்
மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது
புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள்.
இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி
வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல்
கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள்
தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த
நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த
நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா?
ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம்
வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு
அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை
வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம்
விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத்
திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான
தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம்
கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள்
சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை,
அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு
அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம்
சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி,
குழந்தைகளுடன் சென்று அங்கே
வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை;
என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப்
போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்!
அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு
ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை
வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே
வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக்
கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக
இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர்
வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே
வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக
திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல;
நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால்
நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும்
அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின்
வெற்றி பெறும்வரை கடுமையாகவும்
புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ
அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே
அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால்
வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு
அதுதான் தேர்ச்சி என்று ஒரு
எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது
நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான்
நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை
ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச்
செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக
அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்
திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல்
படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.
நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த
பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின்
வெற்றி நமக்கே !

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!
வாழ்த்துகள் !!

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!

இந்த கதையை மெயிலில் அனுப்பிய நன்பர் Acer ரவிக்குமாருக்கு நன்றி

Wednesday, June 16, 2010

இயற்கையை பாதுகாப்போம்

பருவ மழை பருவம் தவறியும் பெய்வதில்லை

பருவ காற்று பருவமறிந்து வீசுவதில்லை

எக்காலமும் அக்காலத்தின் பயன் தருவதில்லை

எந்நிலமும் இயற்கையாய் விளைவதில்லை


நீர், நிலம், காற்று, வான் என இவ்வுலகை காக்க இயற்கை படைத்த படைப்பல்லாம் மனிதனின் தவறான வாழ்க்கை முறையால் தன் நிலை மாறி இவ்வுலகை அழிக்க தயாராகிக் கொண்டுள்ளது.



தாயைப் பழித்தாலும் நீரை பழிக்காதே என்பார்கள். ஆனால் பூமியின் உள்மட்ட நீர்நிலையும் வற்றி, ஜீவநதிகள் எல்லாம் சாயநதிகளாகி புதிது புதிதாய் தோன்றும் நோய்களுக்கல்லாம் நீரின் மேல் பழி போடும் சூழல் உருவாகிவிட்டது.


கைப்பிடி மண்ணை அள்ளி ஆராய்ந்தால் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள், லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள், சிலந்தி, தவளை, தட்டான், குளவி, பறவைகள் என சங்கீத மேடையாக இருந்த விவசாய நிலங்கள் எல்லாம் இன்று மருந்துகளின் நாற்றத்துடன் நஞ்சாகிவிட்டது.


மனிதனின் வாழ்க்கைக்கு எல்லா சவுகரியங்களையும் தேடித்தந்த அறிவியலின் வளர்ச்சி அதன் கழிவை காற்றில் கலந்து வாயு மண்டலம் வரை விஷவாயுவாக மாற்றிவிட்டது.


நாகரிக நகரை உருவாக்க காடுகள் அழிக்கப்பட்டதால் வானும் பூமியும் வெப்பமயமாகி நம் வாழ்வை அழித்துவிடுமோ என்ற அச்சம் மனிதகுலத்தை இன்று தோற்றிக்கொண்டது.


புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் உயர்ந்து பேரழிவை விரைவில் ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளன.


நாம் எதிர் நோக்கியுள்ள பெரும் சவாலை இப்போதே உணர்வோம். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம்.


வாகன உபயோகத்தை குறைப்போம்.

ப்ளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்.

நீர்நிலைகளை பேணிக் காப்போம்.

சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்போம்.

மரங்கள் நிறைந்த பசுமையான இயற்கையை உருவாக்குவோம்.


மேட்டர் கொடுத்த நண்பருக்கு நன்றி..

Saturday, January 30, 2010

குழந்தைகளைப் பாதுகாப்போம்

குழந்தைகளைப் பாதுகாப்போம்

இன்றைய சமூக சூழலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களும் ஒன்று. மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த காமவெறியன், சிதைக்கப்பட்டு புதரில் கிடந்த குழந்தை என்று திரும்பிய பக்கம் எல்லாம் காணக் கிடைக்கும் செய்திகள் நம்மை பயம் கொள்ள செய்வதாக இருக்கின்றன.

ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லாக் குழந்தைகள் மீதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனக்கு நடப்பது என்ன என்று தெரியாமலேயே சீரழிக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்? இதனால் குழந்தைகள் உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.




தம் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை பெற்றோருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் தான் உண்டு. இத்தகைய நச்சு சூழலில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பிரச்சினைகளை நாம் எப்படி எதிர்கொள்வது? எது நல்ல தொடுகை என்றும் எது கெட்ட தொடுகை என்றும் குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது? இது போன்ற விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசுவதே இந்தக் கருத்தரங்கத்தின் நோக்கம்.

மதுரைப் பதிவர்களின் ஏற்பாட்டில், மதுரையில் குழந்தைகள் மனநலம் பற்றியும், அவர்களை அணுகும் முறை பற்றியும் மன நல மருத்துவர் டாக்டர்.ஷாலினி உரையாற்ற இருக்கிறார். நம்முடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான கேள்வி நேரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





நாள் : 31.01.2010 ஞாயிறு நேரம் : மாலை 3 மணி - 6 மணி

இடம் : செமினார் ஹால், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் அலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளவும்.





விபரங்களுக்கு......
தருமி - 9952116112
சீனா - 9840624293
பாலகுமார் - 9486102490
ஜெரி ஈஷானந்தா - 9791390002
ஸ்ரீதர் - 9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138

மின்னஞ்சல் தொடர்புக்கு.....

______________________________________________________________

சமூக நோக்கோடு இந்த கருத்தரங்கை நடத்தும் மதுரைப் பதிவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

மதுரைக்கு போகிறேன்

நாளை மதுரை பதிவர்கள் நடதும் குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுரைக்கு போகிறேன்.

திரும்பிவந்து நிகழ்ச்சிகுறித்து பதிவு இடுகிறேன்....

( அப்ப்ப்பாட ஒரு பதிவு தட்டச்சு செய்வதற்கே தாவு தீர்ந்து போச்சு......)

சந்தைக்கு வாங்க

சந்தை இனிமே அடிக்கடி கூடுமுங்கோ...


எல்லோரும் வாங்கோ...


வாழ்த்துங்கோ...